சனி, 7 ஏப்ரல், 2012

இலவசத்தின் விளைவு ...



இலவசத்தின் விளைவு ...















விளைநிலம் இப்ப விலைநிலம்,
விதை நெல் இலவசமாம்!


களைக்கொல்லி கழிவு விலையில்!
பூச்சிக்கொல்லி புதியவிலையில்!


எருதுக்கு விருது,
தீவன விலையேற்றம்!


மண்ணை துளைத்து மண்டபம்,
மண்புழு வளர்க்க மானியம்!


பயிர்க்கடன் உண்டாம்,
பாசன நீர் பஞ்சத்தில்!


"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!


நேரடி தானியக்கொள்முதல்,
கிடங்குகளை கிடப்பிலிட்டு!


எதிர்க்க வேண்டிய மக்கள் 
இலவசங்களை எதிர்நோக்கி!


வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!


படங்கள் உதவி: கூகுள்

December 23, 2011



இந்த வருடத்தில் நான்....! (தொடர்பதிவு)



படித்ததில் பிடித்தது ?

நிறைய படித்தேன்... நெஞ்சில் அதிகம் ஒட்டியது சுஜாதா அவர்களின் எப்போதும் பெண் என்ற புத்தகம் தான்... அத்தனை நுணுக்கம் .. 

வாங்கிய பொருள் ?

நீண்ட நாள் நான் தேடி தேடிக்கொண்டிருந்த ஒரு கைக்கடிகாரம். திடிரென ஒரு எதிர்பாராமல் ஒரு கடையில் பார்த்தேன் வாங்கிவிட்டேன். வாங்கிய மூன்றாவது வாரம் என்கையை விட்டு பிரிந்து விட்டது... (ம்ம்ம் நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் )

சென்ற இடம் ?

இந்த வருடத்தில் நான் இரண்டு முறை திருப்பதி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை நண்பர்கள் நான்கு பேர் செல்லலாம் என்று முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்து இறுதியில் நானும் இன்னொரு நண்பனும் செல்லும்படி ஆனது ... இருந்தாலும் சிறப்பான பயணம் தான் ... 
மற்றொருமுறை நானும் என் தோழனும் சென்று வந்தோம் .. இரண்டுமே இந்த வருடத்தில் மறக்க இயலா பசுமை நினைவுகள் ...

இரசித்த திரைப்படம் ?

எங்கேயும் எப்போதும் 
ஆரண்ய காண்டம்...
ஆடுகளம் 

உருகிய திரைப்படம் ?

தென்மேற்கு பருவகாற்று 
முத்துக்கு முத்தாக 
வாகை சூட வா 

சிரித்து மகிழ்ந்த திரைப்படம் ?

போட்டா போட்டி 50  : 50
போராளி 

பிடித்த பாடல் ?

உன் பெயரே தெரியாது - எங்கேயும் எப்போதும் 
ராசாத்தி போல - அவன் இவன் 
ஜில்லா விட்டு ஜில்லா -  ஈசன் 

மனதில் நின்ற பாடல் ?

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - தென்மேற்கு பருவகாற்று 

மிகப்பெரிய சந்தோஷம் ?

நான்கு வருடங்களுக்கு பிறகு பழைய பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து பயின்ற பள்ளியில் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ... அப்புறம் இந்த அணியின் உலககோப்பை கனவு நனவானது ... 


புதிய நண்பர்கள் ?

நிறைய இந்த வருடத்தில் புதிய நண்பர்களுடன் கைக்குலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் , மற்றும் பணிபுரியும் இடங்களில்...

சாதனை ?

இன்னும் அந்த அளவுக்கு வளரவே இல்லைங்க... சாதனை செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டுமாம் ... நான் இன்னும் சின்ன பையன்தான் ... 

வருத்தம் ?

நிறைய ஏக்கங்களையும் , சோகங்களையும் குறைவில்லாமல் வழங்கியது இந்த வருடம் அந்த அளவுக்கு மன உறுதியையும் , நம்பிக்கை தரும் நல்ல உள்ளங்களின் நட்பையும் கொடுத்ததினால் இந்த வருத்தத்திற்கு இடமில்லை ..

ஆச்சர்யம் ?

நானும் வலைப்பூவில் தொடர்ந்து கிறுக்கி வருவது தான் ...

பெருமை ?

எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர்கள் கடந்த பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்தது ...



(இந்த தொடர்பதிவு எழுத அழைத்த அன்பு நண்பர் திரு. மயிலன் (மயிலிறகுஅவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்)

December 20, 2011



உலராத ஈரம்...




இரவு பெய்த
மழையில் அமைதியாய்
குளித்த மரங்களின்
உலராத ஈரம்,
இயல்பாய் உணர்த்திச் 
செல்கின்றது, உயிரான
அவளின் நினைவுகளை!

December 15, 2011



வரலாறாகும் வாழ்வு...


சாமத்துல உறங்கி 
சேவலுக்கு முந்தி 
முழிச்சி, கட்ட 
வெளக்கமாரால கட்டுத்தறிய 
சுத்தமாக்கி, குளிச்சி முடிச்சி 
ரெண்டுவேளைக்கும் 
கஞ்சி காய்ச்சி!
மிச்சம் வைச்ச 
சாணத்த கரைச்சி 
வீதியில தெளிச்சி 
பெருக்கி கோலமிட்டு,
பறிச்ச ஒத்த
பரங்கிப்பூவ, கொழைச்ச 
சாணியில, கோலமத்தியில
குலுங்காம வைச்சி 
நிமிர்ந்து பார்க்கையில,
இவளுக்கு முந்தி 
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!  
இப்படி வரலாறா வாழ்ந்த நிலை,
இன்னைக்கு சரத்துல 
சொருகி வைச்ச 
பழைய கடுதாசியா
கிழிஞ்சி தொங்குது 
எச்சமும், மிச்சமுமா!
பாழும் இந்த 
செயற்கை மோகத்தால!?



December 12, 2011



உடைந்த புல்லாங்குழல்...



உடைந்த புல்லாங்குழல் 
கசியும் சுரமற்ற 
இசையாய் 
சுவையற்று கழிகிறது 
அவளை பிரிந்த 
என் வாழ்க்கை!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

December 07, 2011



எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 5


இந்த பயலுவோ இதோ வரேன்னு சொல்லிட்டு போனவனுங்களை இன்னும் காணலையே? அப்படி எங்க தான் போயிருப்பானுக.... 






முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்..
இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!







தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான் குளிக்கமாட்டேன்டி....







இப்படி சீண்டி பாக்கிறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு!




 ஒத்தையா தான் நிக்கிறேன் முடிஞ்சா மோதி பாருங்க...




இப்படி கருப்பா எடுத்து என் மானத்தை வாங்கிபுட்டானுகளே! 





யாருப்பா அது குறுக்க நிக்கிறது! கட்டதுரையா???





எங்களை படம் புடிக்கமுடியுமா? அந்த சீமை துரையே படம் பிடிக்க வந்து ஏமாந்து தான் போனாரு தெரியுமா ???



எங்க போய் நின்னாலும் நம்மளையே குறி வைச்சி எடுக்குரானுக? ஒரு முட்டு முட்டிடலாமா? 





இந்த பயலுவோ என்னத்த கையில வைச்சி கிட்டு திரியிரானுவோ ? ஏதோ மின்னல் கூட வருது அந்த பொட்டியிலருந்து??? என்னாவா இருக்கும் ???







இப்படி மொத்தமா எடுத்து புட்டாயிங்க.. வெக்கமா வருது தம்பி!!!





நாங்க தான் இத்தனை படங்களையும் எடுத்தது!!!



அட சொன்னா நம்புங்க நாங்க தான் எடுத்தோம்!!!


(இந்த படங்களை எடுத்த எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு(ஆனந்து, மணிவண்ணன், முருகன், தமிழருவி, நெப்போலியன், அன்பழகன்) வாழ்த்துக்களை கூறுங்களேன் நண்பர்களே)

November 25, 2011



தீண்டும் மழைத்துளி...


நந்தவனச் சோலையில் 
விரிந்து சிரிக்கும் 
மலர்களின் மேல் 
விழுந்து உடையும் 
மழைத்துளிகளாய்  
என் பால்ய நினைவுகள்!

வானவில்லை பிடித்து  
சூரியனிடம் சுகம் 
விசாரித்த காலங்கள் 
சுருங்கிப் போயின!
குடும்ப வாழ்வின் 
பரிணாம கோடுகளில்! 

அன்று என்னை 
தீண்டி மகிழ்ந்த  
அதே மழைத்துளி 
தான் இன்றும்!

அன்று சாரலில் 
சிறகு விரித்த 
நான் தான் விரட்டி 
அனுப்புகிறேன் என் 
குழந்தைகளை!

நனைந்தால் சளி பிடிக்குமென்று!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

November 22, 2011



நான் இரசித்த பாடல் (4)....

படம் : எங்கேயும் எப்போதும் 

பாடல் : உன் பெயரே தெரியாது ...

இசை : திரு . சத்யா 

வரிகள் : திரு . நா. முத்துக்குமார்

இந்த பாடல் என்னை கொஞ்சம் அதிகம் கவர்ந்த பாடல் என்றே கூறுவேன். அடிக்கடி கேட்டும் சலிக்காத சமீபத்திய பாடல்களில் கட்டாயம் இதுவும் ஒன்று. ஆரம்பிக்கும் முதல் வரி முதல் முடியும் வரை ஒரு நெருக்கத்தை கூட்டும் வரிகளை இணைத்து பாடலுக்கு இனிமை சேர்த்திருப்பார் எளிமை கவிஞர். நா. முத்துக்குமார்.

ஆரம்பமே 

"உன் பெயரே தெரியாது.. உனை கூப்பிட முடியாது

நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..

அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..

அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்"..


மிக எளிமையான வரிகளை வைத்து, பெயர் அறிந்திடாத ஒருத்தனை எண்ணி பெண் பாடுவதாய் அமைந்திருக்கும் இந்த பாடலை இனிமை குறையாமல் அதன் வடிவம் மாறாமல் 
எதிர்பார்ப்பும் குறையாமல் நம்மை பாடலின் ஊடே பயணிக்க வைத்திருப்பார் எளிமை கவிஞர்.

"பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..சட்டென்று முடிந்ததே போகும், 
எப்படி சொல்வேன் நானும், மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?"

பெண்ணின் மனதை அப்படியே படம் படம்பிடித்து நம்மிடம் சுவையாய் வழங்கி கிறக்கத்தை உண்டு பண்ணிருப்பார் கவிஞர்... உதவி செய்த ஒருவனின் பெயரை கூட அறிந்து கொள்ளாமல் அவனை விட்டு பிரிந்த பின் பெண் உணரும் அந்த அவஸ்தையை, தவிப்பை மிக இயல்பாய் 
நறுக்கென்று வழங்கி உள்ளார் இந்த நளின கவிஞர்...

அடுத்து இந்த படத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். படத்தில் இதே போல் நல்ல பாடல்களும் உண்டு. என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல் தான். முதல் படம் மாதிரி அல்லாமல் இயக்குனர் திரு. சரவணன் ரொம்ப திறம்பட படத்தை முடித்து அதே நேரத்தில் விபத்தின் விளைவுகளை அவ்வளவு துல்லியமாய் மக்களுக்கு அழுத்தமாய் உணர்த்திய விதம் மிகச்சிறப்பு.

இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் அற்புதமாய் தங்களது பாத்திரம் அறிந்து வாழ்ந்திருப்பார்கள். அஞ்சலி இந்த படத்தில் சற்று வித்தியாசமான பாத்திரத்தில் கச்சிதமாய் 
பொருந்தி இருந்தார் . அனன்யா சொல்லவே வேண்டாம் அஞ்சலிக்கு போட்டியாக நடித்திருந்தார் 
அதுவும் ஒரு புதுப் பெண் மாநகரங்களில் பயப்படும் நிலையை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தி மனதுக்குள் நுழைந்து விடுகிறார். அப்புறம் ஜெய் மற்றும் சர்வா இருவரும் நடிப்பில் தூள் பண்ணி இருப்பார்கள். 

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. வேல்ராஜ் அவர்களை பற்றி கூறியாகவேண்டும். நல்ல திறமையான ஒளிப்பதிவு. பேருந்து செல்லும் காட்சிகள் மற்றும் சென்னை , திருச்சி போன்ற இடங்களில் எடுத்த காட்சி அமைப்புகளை கண்டு வியந்து போனேன் ..மிரண்டும் போனேன்.

தனது கானக்குரலால் இனிமை கூட்டி வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் மதுஸ்ரீ அவர்களுக்கும், புதுமுகம் என்றாலும் பாடல்களும் சரி, பின்னணி இசையை சேர்த்திருக்கும் கவனத்திலும் மனதை கொள்ளை அடித்து செல்லும் திரு, சத்யா ..அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!


(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)

November 17, 2011



சிதையும் கலைத்தமிழ் ...



துல்லியத் தமிழை 
எள்ளி நகையாடி 
கிள்ளி தமிழாடினான்!

தலைவன் பேசுகிறான் 
என்று களித்து 
கலைகிறது இளந்தமிழ் ரத்தம்!

உரைக்க, உரக்கச் 
சொன்னாலும், உமிழ்ந்து 
வெளியேறி மகிழ்கிறது!

என்று உரைக்கும்?
என்று உணரும்? 
உணர்வின்றி உறங்கும் 
இந்த உயிர்களுக்கு???


November 10, 2011



ஏற்றத்தாழ்வு...




கொளுத்தும் வெயிலில், 
குறையாத பசியில் 
சில்லறை கேட்கும் 
- பிஞ்சுகளும்,

குளு குளு அறையில் 
குளிர்ந்து நிறையும் 
-பிஞ்சுகளும், 
-இந்தப்பூமியில் தான்!

கிழிந்த உடையுடன் 
கலையாத நம்பிக்கையுடன் 
வட்டமிடும் 
வண்ணத்துப் பூச்சிகளும்!

கலையாத கேசத்துடன் 
கசங்காத உடையுடன்
நோட்டமிடும் 
வண்ணத்துப் பூச்சிகளும்,
-இந்தப்பூமியில் தான்!

நிரைந்த ஏக்கத்துடன் 
நிரையாத தாகத்துடன் 
புத்தகம் புரட்டும் பூக்களும்!

நிரைந்த கனவுகளுடன் 
நிலையில்லா மனதுடன் 
புத்தகம் மூடும் பூக்களும்!
-இந்தப்பூமியில் தான்!

வழியும் கண்ணீருடன் 
வளையாத நம்பிக்கையுடன்,
பாடித்தேடும் குயில்களும்!

பொங்கும் புன்னகையுடன்,
புரியாத மொழியில்,
கூவித்திரியும் குயில்களும்!
-இந்தப்பூமியில் தான்!

வறுமைக்கு திறந்த 
சன்னல் மூடுவதும்,

வசதிக்கு ஆயிரம் 
கதவுகள் திறப்பதும் 
-இந்தப்பூமியில் தான்!


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. சாகம்பரி (அன்னைபூமிஅவர்களுக்கு என் நன்றிகள்.

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

November 04, 2011



அவளில்லாமல்!


மின்கம்பியில் சிக்கி 
கிழிந்து தொங்கும் 
காற்றாடியும், நானும் 
ஒன்றுதான்!
காற்றாடி நூலில்லாமல்! 
நான் அவளில்லாமல்!


October 29, 2011



மின்னல்...


சட்டென்று வந்து 
வெட்டிச் செல்லும் 
மின்னலைப்  போல 
அவனின் எதிர்பாரா 
முத்தத்தில் அதிர்ந்து 
போகிறேன்...

படங்கள் உதவி : கூகுள் இணையம் 


என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ஆமினா
 (குட்டி சுவர்க்கம்)அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    

October 21, 2011



எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 4

நாயுருவி 

பார்க்க தான் அழகுங்க ... 

ஓடி ஓடி உழைக்கணும் ...

நான் கடிச்சா தாங்கமாட்ட ... 

நான் கொஞ்சும் இயற்கை 

காசில்லா சீப்புங்க ...

சோடி மலர்தாங்க ...

நீங்களே ஒரு பெயர் வையுங்க ...


என் பெயரை கூறுங்க பார்ப்போம் ...

நான் கருப்பு வைரம்ங்க ...


(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


(என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய திருமதி. ராஜி (கற்றலும் கேட்டலும்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)


குறிப்பு: நமது சக நண்பர் அண்ணன் திரு. ஆர். வி. சரவணன் வரும் வாரத்திலிருந்து அவரின் குடந்தையூர் தளத்தில் இளமை எழுதும் கவிதை நீ என்ற தொடர்கதை எழுத உள்ளார், நண்பர்களாகிய நீங்களும் உங்கள் ஆதரவை வழங்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.... நன்றி 


October 14, 2011



நுட்ப வளர்ச்சி...


எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்த நாட்டில் அதை பயன் படுத்துவதை விட இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அறிமுக படுத்தி காசாக்க எண்ணுகிறார்கள்! அதை செய்தும் காட்டிவிட்டனர்.

"கவர்ச்சிகளை கண்டு மயங்குவதில் நமக்கு நிகர் நாமே தான் "

பெரும்பான்மையான பொருட்களை நாம் உதாரணமாக காணலாம் . 

அதில் ஒன்று தான் இந்த டிஜிட்டல் விளம்பர பதாகைகள்! எங்கு திரும்பினாலும் ஏதோ ஒரு வடிவில் இதை காணாத இடமே இல்லை. கிராமத்திலும் சரி , நகரத்திலும் சரி எங்கும் ஒரே நிலை தான். அதுவும் குறிப்பாக மூன்று நான்கு வருடங்களில் இதன் வளர்ச்சி அசூரத்தனமான வளர்ச்சி.நல்ல மாற்றம் தான் , தொழில்நுட்ப வளர்ச்சிதான். கண்டு பிடித்த ஒரு பொருளை அதன் பயன்பாட்டை விட மற்ற வழிகளில் பயன்படுத்துவதில் நம்மாட்கள் வல்லவர்கள்! 

முதலில் இந்த டிஜிட்டல் விளம்பரங்கள் சினிமா துறையில் பெருமளவில் பயன்படுத்தினர், பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் புதியதாய் தொழில் தொடங்கும் முதலாளிகள் தங்களின் கடைகளுக்கு மின்னொளியில் சிரிக்கும் விளம்பர பலகைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். பளிச்சென்று கண்ணை கவரும் நடிகைகளையும், தலைவர்களையும் கண்டு ஒரு ஈர்ப்பு வந்து அதன் தாக்கமாய் நமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ திருமண வாழ்த்து பதாகைகளை வைத்து அழகு பார்த்தோம். பிறகு கொஞ்சம் நகர்ந்து ஊரின் திருவிழாக்களுக்கு வரவேற்பு பலகைகள் அமைத்து பெருமையாய் கொண்டாடினோம். பின்னர் கொஞ்சம் வளர்ந்து பிறந்த நாள் விழாக்களுக்கு (?!) வைத்து பெருமையை பறை சாற்றினோம். 

ஒரு பொருளை எந்த நோக்கத்திற்கு கண்டு பிடித்தானோ அதையும் மீறி நாம் அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தி கண்டுபிடித்தவனுக்கு எண்ணியதை விட வருமானத்தை பெருக்கி கொடுக்கும் வல்லமை நம் மக்களுக்கு தான் உண்டு. திருமண வாழ்த்துக்களை உறவினர்களோ , நண்பர்களோ தெரிவிப்பார்கள் அவர்களுக்கு முடிந்த வடிவில். முன்னரெல்லாம் ஒரு சின்ன வாழ்த்து மடல் அச்சடித்து அதன் ஓரத்தில் இனிப்பாய் ஒரு மிட்டாயை இணைத்து வந்து வாழ்த்திய அனைவருக்கும் வழங்குவார்கள். சமீப காலமாக எல்லோர் திருமண வீட்டிலும் இந்த டிஜிட்டல் பதாகைகள் கட்டாயம் இடம் பிடித்து விடுகிறது. இன்றைய நிலை வேறுமாதிரி உள்ளது , தன் வீட்டு நிகழ்வுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிரித்த வண்ணம் ஒரு பதாகைகளை தாங்களே வைத்து தமது குடும்பங்களின் பெருமையையும்? , பொருளாதரத்தையும் வெளிக்கொணரும் விதமாக காட்டிகொள்கிறார்கள்.

இப்படி அங்கும் இங்கும் சிரிக்கும் பலகைகள் பெரும்பாலும் பெருமைக்கு வைக்கப் பட்டவைகளாகவே இருக்கின்றது. விவசாய விழிப்புணர்வோ, கல்வி விழிப்புணர்வோ, நமது பண்பாடு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வாகவோ இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை ...இதில் கொடுமை என்னவெனில் எதற்குதான் இந்த பதாகைகள் வைக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் வந்துவிட்டது, இன்னும் சில காலம் கழித்து பார்த்தால் நிமிர்ந்தாலும், குனிந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் பதாகைகள் அமைத்து அழகு பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம் என்று அஞ்சதோன்றுகிறது. 

இந்த டிஜிட்டல் வருகையால் இங்கு பல குடும்பங்கள் சோறின்றி போய்விட்டது, பல நல்ல கலைநயமிக்க ஓவியர்களை இழந்தோம். சுற்று சூழலையும் மாசுபடுத்துகிறோம். பல ஆண்டுகள் நம்மை அடிமை படுத்தி வைத்து இருந்த அந்நியர்கள் இன்று அவர்களின் பொருட்களால் நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கிறார்கள். என்று தணியும் இந்த அந்நிய மோகம். நான் இதை கூறுவதால் இந்த தொழில்நுட்பத்துக்கு எதிரி இல்லை.. இதை பயன் படுத்த வேண்டிய இடத்தில் பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகிறேன். இந்த தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தவன் நாம் பயன்படுத்துவது போல் அவன் வீதிகளிலோ, வீடுகளிலோ பயன்படுத்துவதில்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் நட்புகளே!!!

இந்த பலகைகளை எங்கு எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறை இல்லாமல் ஊருக்கு மத்தியிலோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ, சாலைகளை இணைக்கும் முக்கிய வளைவுகளிலோ வைத்து அழகு பார்க்கின்றனர். விழா முடிந்து பல நாட்கள் ஆகியும் அப்புறபடுத்தாமல் விட்டு விடுகிறோம். அது முறிந்து விழுந்து,  பல விபத்துகளுக்கும், உயிர் சேதங்களுக்கும், வாகன ஓட்டிகளின் சிரமத்திற்கு நாமே காரணமாகின்றோம் என்பதை உணர மறுக்கின்றோம். 

பெயரளவில் நெறிமுறை படுத்தும் அரசு இதை கடுமையான சட்டம் இயற்றி நெறிபடுத்தினால் மதிப்புமிக்க பல உயிர் இழப்புகளையும், இன்னும்பிற  சேதங்களையும்  முன்கூட்டியே தடுக்கலாம். மக்களை காக்கவேண்டிய அரசு சரியான விழிப்புணர்வு கொடுத்து , தன் கடமையை முறையாக ஆற்றினால் நன்றாக இருக்கும்...


October 07, 2011



செல்ல கோபம்...



கலைந்து கூடும் 

மேகங்களாய் - அவளின் 
கோபங்கள் 
வரமாலும் இல்லை 
வலுவாகவும் இல்லை...


September 28, 2011



நிலவின் பிம்பமாய்...



குளத்து நீரில் 
விழுந்த நிலவின் 
பிம்பமாய் தத்தளிக்கிறேன்!
அவள் மௌனித்து 
கொல்லுகையில்!

சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் திரு. ராஜேஷ்  மாய உலகம் அவர்களுக்கும், மற்றொரு நண்பர் திரு. மகேந்திரன் வசந்த மண்டபம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.


படங்கள் உதவி : கூகுள் இணையம்  


September 12, 2011



நெ(வ)சவுத்தொழில்




பத்துக்கும் மேல 
ரேகைய பதிஞ்சு 
பழைய எந்திரத்தை 
பொழப்புக்கு வாங்கியாந்தேன்!

வறுமைக்கு வாங்கிய 
கடனை அடைச்சி
ஏகாந்தம் தேடலாமுன்னு 
எளிய நெனப்புடன்!

மனசுல நெனச்சது
மண்ணா போச்சு!
இடி விழுந்த 
பன மரமா இளிச்சி
நிக்குது எதிர்காலம்!

பட்டு நெய்து 
பாரெல்லாம் கொடுத்தேன்,
எம்புள்ளைக்கு ஒத்தை 
பருத்தி மிஞ்சல!

உசுரு இல்லாத 
ஓணானா கெடக்குது 
ஓஞ்சு போன எந்திரம் 
மின்சாரம் இல்லாம!

குலத்தொழிலால குடும்பம் 
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல 
புடுங்குது வட்டியும் , அசலும்!

வசதிய நெனக்கல,
வறுமை ஒழிஞ்சா 
போதும்ங்க! 

எம்புள்ளைக்கு ஒசந்த 
பள்ளிய எண்ணல,
அறிவ தொறக்க 
அரசு பள்ளியே போதும்ங்க!

வகை வகையா சாப்பிட 
நெனக்கலை, வயிறு 
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா 
கெடைச்சா போதும்ங்க!




நித்தம் வண்ண சாயம் 
புழியுறேன், இருண்ட 
வாழ்வுல ஒளிக்கீற்று 
வாராதா என்று??? 

 படங்கள் உதவி : கூகுள் இணையம் 
 



September 07, 2011



நான் இரசித்த பாடல் (3)....

படம் : சண்டக்கோழி 

பாடல் : தாவணி போட்ட ..

இசை : யுவன்ஷங்கர் ராஜா 

வரிகள் : கவிஞர். யுகபாரதி 

ஒருமுறை கேட்டால் மறுபடியும் கேட்க மனம் தூண்டும் அந்த வகையில் என்னை கவர்ந்த பாடல் இதுவும் ஒன்று. கேட்டாலே காதலில் நம்மையும் விழ வைக்கும் அப்படியொரு அழகிய வரிகள் வழங்கி அசத்தி இருக்கின்றார் கவிஞர். யுகபாரதி. 

"தாவணி போட்ட தீபாவளி 
வந்தது என் வீட்டுக்கு 
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு " 



ஆரம்பமே அதிரடியாய் வரிகளை தொகுத்து சரவெடியாய் வெடித்து நம்மை உள்ளே கூட்டிச்செல்லும் வித்தை இவருக்கு நன்றாகவே வந்துள்ளது.

"பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்க்கமா 
பச்ச தண்ணி நீ கொடுத்த ஆகிப்போகும் தீர்த்தமா"

"மகா மகா குளமே என் மனசு கேட்ட முகமே 
நவா பழ நிறமே! என்ன நறுக்கி போட்ட நகமே!"

இயல்பான வரிகளை இணைத்து பாடலின் சுவையையும் தரத்தையும் ஒருசேர மெருகேற்றி இருக்கின்றார் கவிஞர்.  அதே வேளையில் காதலர்களை பற்றி மிக ரம்மியமாய் அழகிய சொற்களை சேர்த்து காதலின் ஆழத்தையும் , அழகையும் அற்புதமாய் செதுக்கி வைத்துள்ளார் இந்த காதல் மனிதர்.

"கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே!
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே!"

இப்படி பெண் பாடுவதாய் அமைத்து பெண்ணின் கோணத்தில் இருந்து காதலின்
நெருக்கத்தையும், நேசத்தையும் நிறைவாய் கூறி இருக்கின்றார்.

"தேக்கு மர சன்னல் நீ தேவ லோக மின்னல் 
ஈச்ச மர தொட்டில் நீ எலந்த பழ கட்டில் 
அருந்த வாலு, குறும்பு தேளு 
ஆனாலும் நீ ஏஞ்சலு!"



இயற்கையாய் வந்து விழுந்த வார்த்தைகளை தொடுத்து அழகிய காதல் மாலை 
தொடுத்து நம்மிடம் ரசிக்க கொடுத்துள்ளார். இப்பாடலை கேட்டு முடித்த பின் நெஞ்சுக்கூட்டில் காதல் ஊற்று சுரக்கும் அப்படி ஒரு அழகிய காதல் வர்ணனை.

சலிப்பு தட்டா வண்ணம் இயல்பான மெல்லிசை அமைத்து இவ்வரிகளின் சுவையை மேலும் கூட்டி, பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டி இருக்கின்றார் இசை அரசரின் வாரிசு திரு. யுவன் ஷங்கர் ராஜா. 

அற்புத வரிகளுக்கு அம்சமான குரல்களால் உயிர் கொடுத்திருப்பர் திரு. விஜய் யேசுதாஸ் மற்றும் திருமதி. சிரேயா கோஷல். இவர்களின் குரல்வளம் இந்த பாடலுக்கு மற்றுமொரு மணிமகுடம்.

சிறப்பான நடிப்பினால் உள்ளத்தை கொள்ளை கொள்வார்கள் விஷாலும் , நாயகி மீரா ஜாஸ்மினும். இந்த பாடலில் மீராவின் அழகும் , துள்ளலான துல்லிய நடிப்பும் நவரசத்தை கூட்டும்.

அற்புத காட்சி அமைப்புகள் , நல்லதொரு வசனங்கள் என்று மொத்த படத்தையும் தரம் குறையாமல் நமக்கு வழங்கி இருப்பார் இயக்குனர் திரு. லிங்குசாமி. அனைவரின் ரசணைக்கும் ஏற்றார் போல் அழகிய பாடல்களும், காட்சிகளும் நிறைந்த தரமான படம் இது.

எனக்கு பிடித்த பாடலை உங்களோடும் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம் அடைகிறேன் அன்பு உறவுகளே!

(நன்றி கூகுள் இணையம் யு டியுப்)

September 03, 2011



உண்மையான குற்றவாளிகள் யார்???




மறைக்கப்பட்ட சில அதிர்ச்சி உண்மைகளை கூறும் 
தமிழ் புலனாய்வு அதிகாரியின் பேட்டி
நேரம் இருப்பின் பாருங்கள் கொஞ்சம் நீளமான காணொளி.
சில விஷயங்கள் உங்களுக்கும் புரியலாம். 



நன்றி : குமுதம் மற்றும் வன்னி ஆன்லைன் இணையம் தமிழ் சீரியல் ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக