புதன், 7 டிசம்பர், 2011

காம பாடம் நடத்திய வாழ்க்கை!


காம பாடம் நடத்திய வாழ்க்கை!
















 

காமம் என்றால் என்ன
என்னிடம் கேட்டது வாழ்க்கை
புணர்ச்சி வேட்கையே காமம்
சொன்னது நான்

தவறு
காதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்

எங்கள் இளைஞர்களின் கருத்து
வேறுவிதமாய் உள்ளதே என்றேன் நான்
என்னவென வினவியது வாழ்க்கை

வாழ்வின் நோக்கமே காமம்
என்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும்

அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுத்தான்
பிழைக்கிறது
சினிமாவும் பத்திரிக்கையும் என்றேன்

உண்மைதான்
அது முறையற்ற காமம்
அவர்கள் மாயவலையில்
விழும் ஈனமான்கள்
ஆனால் மெய்நிலை வேறு என்றது


விளக்கு என்றேன் வியப்புடன்
அழகாய் விளக்கியது வாழ்க்கை

பெரிய உணவுத் திருவிழா
வகை வகையான உணவு வகைகள்
திகட்டத் திகட்ட அலுக்காத அறுசுவைகள்
புதுமை புதுமை என
பிரம்மாண்டமாய் விளம்பரங்கள்

ஊரிலுள்ளோர் எல்லோரும் கூடினார்களாம்
அந்த அரங்கத்தில்

பிரம்மாண்ட மேஜை
பெரிய பட்டு விரிப்பு
எல்லோர் கண்களும் அதன் மேலே

திரை நீக்கப்பட்டது

இருந்தது என்ன தெரியுமா?
நாம் அன்றாடம் சாப்பிடும்

சாதமும் சாம்பாரும்
ரசமும் பொறியலும்
அப்பளமும் கூட்டும்


வீட்டில் சாப்பிடாத
வெறிநாய்கள்

தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.

இதுதான் காமம் என்றது வாழ்க்கை

எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டது வாழ்க்கை
பெருமிதமாய் பார்த்தேன்

என் அறிவு தோற்றுவிட்ட
வாழ்க்கையை நோக்கி!

நன்றி: துரைடேனியல் 
Download As PDF

இருபதுவயது கிழவிகள்!

 

னது பதிமூன்றாவது
அகவையில் அவள்
 ''அம்மா'' வென அலறினாள்
அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு..

அடுத்த நாள்
குடிசைக்குள் குடிபுகுந்தாள்..

அடுத்த வாரம்
அவளைக் குமரியென்றனர்..
குடிசையை பிரித்தனர்..
பந்தலிட்டனர்..பந்தியிட்டனர்..
முடிச்சுகள் மூன்று
அவள் கழுத்தை ஆட்கொண்டது..

பந்தலிட்ட பச்சைமட்டை
காய்ந்து போவதற்குள்
அப் பெண்ணின் அடிவயிறு
பெருக்க ஆரம்பித்தது..
ஆம்.. குழந்தைக்குள் குழந்தை.

பத்தாவது மாதம்
ஒரு குழந்தை ஜனிக்கப் போகிறதா
ஒரு குழந்தை மரிக்கப்போகிறதா
எனத்தெரியவில்லை..
பிரசவ வலி அவளுக்குள்
ஒரு பிரளயத்தையே
உண்டு பண்ணியது..
''அய்யோ அம்மா'' என்று
அப்பெண்ணின் அலறல்
இப்போதே செத்தால் போதும் என்ற
பொருள்படத்தான் ஓலமிட்டது..

மீசை முளைக்காத அவன்
கணவன் என்ற அந்தஸ்தில்
முகத்தில் பயத்தை
அப்பிக்கொண்டு நிற்கிறான்..
முப்பது வயதைத் தாண்டாத
அவளது பெற்றோர்
தாத்தா பாட்டி என்ற
பட்டத்தைப் பெற காத்திருக்கிறார்கள்..

கிராமத்து மருத்துவச்சியின்
தலைமையில் பிரசவமாம்..
பிரசவமானதுமுண்டு-பிறர்
சவமானதுமுண்டு..

ஆண் குழந்தைக்கு தாய்ப்பால்
பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்
ஏற்கனவே எடுத்த முடிவுதான்..

அவள் சவமாகவில்லை
பிரசவமானாள்..
முன்னதாக அவள்
சாவை சந்தித்துவிட்டுதான்
வந்திருந்தாள்...

குழந்தை பிறந்து
தொப்புள் கொடிக்கூட
அறுபடாத நிலையில்
அனைவரின் கண்களும்
குழந்தையின் இடுப்புக்குக் கீழே
குறிவைத்து குறி தேடின..
அப்பாடா..ஆண்குழந்தைதான்..
தப்பியது குழந்தை..

தாய்ப்பால் குடித்த உதடுகள்
காய்ந்து போகாத நிலையில்
தன் குழந்தைக்கு பாலூட்டினாள்..
மார்பகங்களே சுரக்காத நிலையில்
தாய்ப்பால் எப்படி சுரந்தது
எனத்தெரியவில்லை..

வயதுக்கு வந்தவுடன்
தாவணி கட்டி
அழகு பார்க்கும் பருவத்தில்
தாலி கட்டிதான் அழகுபார்த்தனர்.
அவள் அழுது பார்த்தாள் ..
அழுகை தோற்றுத்தான் போனது..  

குழந்தை குமரியாய்..
குமரி கிழவியாய்..

இப்படித்தான் கிராமம் தோறும்
எத்தனை இருபதுவயது கிழவிகள்..  
Download As PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக