செவ்வாய், 6 டிசம்பர், 2011

புதிய பாதைகள் படைப்போம்


புதிய பாதைகள் படைப்போம்
அழகிய பூமி, அதைத் தொடும்
எல்லையற்ற வானம்
இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள்.
அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள்

இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி
வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி
அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில்
அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்?

என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்?
ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம்
ஆனால் அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம்
எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம்

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய்
உதித்து விந்தைகள் புரிந்த
கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம்
பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங்களாகய்ப் பகுத்துள்ளோம்
எம் எல்லை மீறி பிறவுயிர்ப் பிரதேசங்களைப் பறிக்கிறோம்

ஆற்றல்மிகு அறிவு கொண்டு அணு ஆற்றலை அளவிட்டோம்
அழிக்கும் தொழிலை கையிலெடுத்து காலத்துக்கே சவாலிட்டோம்
மாசு படிந்த எம் மனங்களின் பிளவுகளைச் சரி செய்திட மறந்திட்டோம்
அன்பு நீரூற்ற மறந்திட்டு உறவுகளைக் கருக விட்டோம்

போதும் எம் அறியாமை வளர்த்திட்ட வன் செயல்கள்
வேண்டாம் எம் கொள்கைகள் வளர்த்திட்ட எல்லைகள்
போதாது நாம் கைப்பற்றிய உண்மை ஆற்றல்கள்
வேண்டும் இனி மேலும் புதிய பாதைகள்

எப்போதும் இயற்கையை அணைத்துச் செல்வோம்
அப்போது படைப்பதும் அழிப்பதும் நாமே செய்வோம்
நிலாவுக்கும் இங்கிருந்து ஓர் பாதை அமைப்போம்
பின் இரவிலும் விழித்திருந்து அதை ரசித்திருப்போம்

விஞ்ஞானங் கொண்டு பல கருவி செய்வோம்
நட்சத்திரங்களிலும் நன்கு உலா வருவோம்
ஓரினம், ஒரு பூமி என்று சொல்வோம்
வேற்றுக் கிரகங்களிலும் மாட்சி செய்வோம்

காலம் எப்போதும் பதில் சொல்லாது
புறப்படுவோம் இனியும் காத்திருக்காது
தடைகளைத் தாண்டி முன்னேறுவோம்
அச்சமின்றிப் புதிய பாதைகள் படைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக