ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஒற்றுமை..?


ஒற்றுமை..?



"ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” - இவையெலாம்
ஒன்று பட்டு வாழ்ந்து வென்ற நம்
தோன்றுத்துறைக்கு மூத்தவர் சேர்த்த
அறிவின் சொத்து!

எங்கும் இந்த பூமியில் நீர் இருந்தது
தங்கும் காலமாற்றத்தால்-அது
முங்கும் என ஆனபோது
அங்கே ஆனது நிலங்கள்.

பரிணாம வளர்ச்சியால்
பாரினில் வந்தான் மானிடன்.
பெற்றவர் ஆதாம் ஏவாள்-இதை
கற்றவர் நினைவு செய்த போதும்
உற்றுணர மாட்டாமல்
மறந்தான்...மறுத்தான்...மறதியாள மானிடன்.

தேசக்கோடுகள் இட்டான்
பாசை வெறி கொண்டான்
துவேசப் பார்வை கண்டான்

ஒன்றை மறந்தான்-அனைவரும்
ஒன்றென்பதை மறந்தான்
அன்றிலிருந்து அல்லல் உற்றான்-தினம்
அவதிகள் பெற்றான்.

ஒருமைக்கு வறுமை வந்தது,
சந்தோசம் செத்தது உல்லாசம் போனது,
அறிவால் உணர்ந்து அருமை அறிந்து
ஒருமை வளர்க்கத் தவறினான்.

கடலில் பிரிவில்லை - கண்டவன்
மானிடன் மட்டும் தான். - அது
நீரென்றே ஒருமைப்பட்டுள்ளது அதில்
உள்ளே உலாவும் மீனுக்கு
அரபிக்கடலா ? இந்தியப்பெருங்கடலா?
சத்தியமாய் தெரியாது.

கதிரோ-மதியோ விதிப்படி உலகப்பொதுதான்!
பயன்படும் மொழிகள் ஆயிரமானாலும் பயன்பாடொன்றே!
பறிமாறப்படும் உணர்வுகள் ஒன்றே!
பல வண்ண துணியானாலும்
பருத்தியைத்தான் விரித்துக்காட்டும்.

ஆயினும்..
ஏன் ஒரு முதுகந்தண்டிலிருந்து
வந்தவனுக்குள் மட்டும் ஒராயிரம் வேற்றுமைகள்?

ஏன்-இவன் தன் விரலால் முள்ளெடுத்து
ரணப்படுத்துகிறான் தன் விழிகளையே?

இவன் விழிகளில் ரத்தம் கசிய
சித்தம் உருகிப்போகிறார்களே அன்பு கோண்டோர்!

ஆம்!
இருந்ததே ஒன்று தான்
இருப்பதும் ஒன்று தான்

பிரித்தான் மானிடன்
வினைச்சுட்டது,
பாவி-இவன் பட்டான்...படுகிறான்..
தொடர்ந்தால்..படுவான்.

ஓ..மானிடர்கால்!
இல்லாத வேற்றுமை வகுத்து-உயர்வில்
தள்ளாத கிழம் ஆக்காதே உன்னை.

ஆறறிவு உள்ளவனாம் இவன்
அடித்துகொண்டு சாகிறான்
பகுத்தறிவிருந்தும் பிரிந்தே வீழ்கிறான்.

ஐந்தறிவு உயிரியிடமிருந்து
இவன் கற்க வேண்டியதோ ஏராளம்.
காக்கைதேனிஎறும்புஇன்னும் பல..
இவற்றிலிருந்தாவது கற்றால்..
தேறுவான்-முன்னேருவான்!

மாமிசப்பட்சிகளோ காடுவாழ் கடும் மிருகங்களோ கூட
அவ்வளவாக அதனுள் சண்டையிட்டு சாவதில்லை.
அவைகளெலாம் அமைதியை நாட
அனைத்து வெறியையும் இவனுக்கு
அணிவித்தது யார்?

ஏன் இந்த கேவலத்திற்கு -இவன்
அடிமையானான்?
இவனை மனிதனாக்க வந்தவையே மதங்கள்-
அது கூறும் ஒற்றுமையை விட்டுவிட்டு
விதவிதமாக கலகம் வளர்த்து உலகம் அழிக்கிறான்.

மேலும் திருந்தாவிடில் மனிதன் எனும் சொல்
இவனுக்கு பொருந்தாது.
அகராதியிலிருந்தே அழிக்கச்சொல்லி
ஆக்க வேண்டும் கடுஞ்சொல்.

மனித மாண்பு மாசுபட்டது போதும்
அடகுவைத்த அழகறிவை மெய்யறிவால் மீட்டு
மனிதனை கெடுத்து நிற்கும் வேற்றுமையை ஓட்டு
யாருக்கும் மனிதனென்ற பார்வையில் ஆதரவுக்கரம் நீட்டு
அப்போது இன்பமெலாம் வைக்குமே உன்னிடம் கூட்டு
ஒற்றுமையால் உயரே நீ உலக அமைதியை நாட்டு

-ஜே.எம்.பாட்ஷா (எ) ராஜா முஹம்மத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக