செவ்வாய், 6 டிசம்பர், 2011

குறட்டைத் தொல்லை - சமாளிப்பது எப்படி?


குறட்டைத் தொல்லை - சமாளிப்பது எப்படி?

சிலருக்கு இரவில் தூங்கும்போது குறட்டைச் சத்தம் அதிகமாக இருக்கும். ஆகவே பக்கத்தில் தூங்குபவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த குறட்டை பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்த குறட்டைத் தொல்லைக்கு என்ன நிவாரணம்? ஒரு சின்ன அலசல்.

குறட்டைத் தொல்லை உலகம் முழுவதும் பலகோடி மக்களுக்கு தினமும் தொல்லை தரும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. 35 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஆண்களில் நூற்றுக்கு 20 பேரும் பெண்களில் நூற்றுக்கு 10 பேரும் குறட்டை விடுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியானால் இது உலகளாவிய பிரச்சினைதான். பெண்கள் குறைவாக குறட்டை விடுவதற்கு காரணம் அவர்களது உடலில் உள்ள Progesterone என்ற ஹார்மோன் என நம்பப்படுகிறது. மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பிறகு இந்த ஹார்மோன் அளவு குறைவதால் குறட்டை விடும் அளவும் அதிகரிக்கிறது.

குறட்டை எப்படி உருவாகிறது?

நாம் சுவாசிப்பதற்காக நமது நமது மூச்சை வெளிவிடும்போது நமது தொண்டை, மூக்கு, வாய் ஆகிய உறுப்புகள் வழியாக வெளியேறுகிறது. பகல் நேரத்தில் இவைகளைச் சுற்றியுள்ள தசைநார்கள் இறுக்கமடைந்து காற்று வெளியேறும் பாதையானது தடையின்றி காணப்படுவதால் சுலபமாக வெளியேறுகின்றது. ஆனால் இரவில் தசைநார்கள் தளர்வடைகின்றன. இதனால் காற்று வெளியேறும் பாதையானது குறுகலடைகின்றது. வெளியேறும் காற்று தொண்டை, மூக்கு, வாய் ஆகிவற்றின் தளர்வடைந்துள்ள தசை இழைகளில் மோதும்போது சத்தத்தை எழுப்புகின்றது. இதுவே குறட்டை ஒலியாக வெளிவருகின்றது.

யாருக்கு அதிகம்?

காற்றின் பாதையில் தடை அல்லது பிறவிக்குறைபாடு உள்ளவர்கள் எப்பொழுதும் இரவில் குறட்டை விடுபவர்களாக இருப்பார்கள். உதாரணமாக மூக்கு தண்டுவட சுவர் வளைந்திருப்பதாலும், நீர்ச் சதைகள் (Polyps) இருப்பதாலும் அடைபட்ட மூக்கில் தடைபட்ட காற்று செல்லும்போது அதிர்வினால் குறட்டைச் சத்தம் வரும். சிலருக்கு சில நோய்கள் காரணமாக தற்காலிகமாக குறட்டைப் பிரச்சினை உருவாகலாம். கடுமையான ஜலதோஷம், மூக்கடைப்பு, டான்சில் மற்றும் அடினாய்ட் ஆகியவற்றாலும் குறட்டை உருவாகலாம். அந்நோய்கள் குணமாகியவுடன் குறட்டையும் நீங்கிவிடும். ஒரு நபர் குறட்டையிலிருந்து விடுபட்டால் அவாpன் குடும்பத்தினருக்கு அதைவிட சந்தோஷம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் குறட்டையின் சத்தம் சாதாரணமானது அல்ல. மோசமான குறட்டைச் சத்தம் 40 முதல் 60 டெசிபல் ஒலி அளவை எட்டலாம். அதாவது ஒரு காரின் எஞ்சின் அளவுக்கு சத்தத்தை உருவாக்கலாம். பக்கத்தில் படுத்திருப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். பரிதாபம்தான்.

கட்டையான கழுத்தும், சிறிய நாடியும், தொங்கும் கீழ்த்தாடையும் உடையவர்களின் குறட்டையை நிறுத்துவது கஷ்டமான காரியம்தான். பற்களுக்கிடையில் இடைவெளி அதிகம் இருந்தாலும் குறட்டை உருவாகலாம். அப்படியானால் பல் மருத்துவரிடம் காண்பிக்கலாம். முன்பு குறிப்பிட்டது போல் மூக்குத்தண்டுச் சுவர் வளைந்திருந்தால் அல்லது டான்சில் அல்லது அடினாய்ட் வளர்ந்திருந்தால் காது மூக்கு தொண்டை நிபுணரிடம் (ENT Specialist) காண்பித்து சிகிச்சை எடுத்து. குறட்டைப் பிரச்சினையை தீர்க்கலாம்.

எடையும் காரணமாகலாம்

குறட்டைக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. எடை அதிகமாக உள்ளவர்களுக்கு குறட்டை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் கொழுத்த கழுத்து அவர்களின் சுவாசக் குழாயை அழுத்துவதும், கொழுப்பு நிறைந்த சுவாசக் குழாய் அவர்களின் சுவாசத்தை தடுப்பதுமேயாகும்.

கொழுத்தவர்கள் அதிகம் குறட்டை விடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கொழுத்தவர்கள் பெரும்பாலும் மல்லாந்துதான் படுப்பார்கள். அதிக எடை காரணமாக பக்கவாட்டில் ஒருக்களித்து படுப்பது சிரமமாக இருப்பதால் அப்படி செய்கிறார்கள். இதுவும் குறட்டையை ஏற்படுத்துகிறது. நமது எடையை குறைத்து விட்டால் குறட்டை விடுவதும் தானாக நின்று விடும் அதிசயம் நடக்கிறது. அதிக எடை ஆபத்து. வேண்டாமே ப்ளீஸ்….

மதுபானம்

மது அருந்தும் பழக்கமுள்ளவர்களும் குறட்டைப் பிரச்சினையினால் பாதிக்கப் படுகிறார்கள். தொண்டையிலும் மூக்கிலும் உள்ள மெல்லிய சவ்வுகள் மதுபானத்தால் வீக்கமடைகின்றன. இதனால் சுவாசத்தின்போது காற்று உட்செல்வதும் வெளியேறுவதும் தடைபடுகிறது. இது குறட்டைக்கு வழிவகுக்கின்றது. மதுபானம் ஆழ்ந்த தூக்கத்தை வரவழைப்பதால் குறட்டையை உருவாக்குகிறது. மதுபானம் அருந்துபவர்கள் அதை நிறுத்தியவுடன் குறட்டைப் பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

மாத்திரைகள்

மதுபானத்தைப் போலவே தூக்க மாத்திரைகளும் குறட்டைக்கு வழிவகுக்கின்றன. இவை தொண்டைப் பகுதியிலும், சுவாசப் பாதையிலும் உள்ள தசைகளைத் தளரச் செய்வதால் குறட்டையை உருவாக்குகின்றன. மூக்கடைப்பு, சொறி, படை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வாமை எதிர் மாத்திரைகளும் (Antihistamine) குறட்டைக்குக் காரணமாகலாம்.

நீங்கள் இவ்விதமான மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அதை நிறுத்திவிட வேண்டாம். அவற்றை ஏதாவது காரணமாகத்தான் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். ஆகவே அத்தகைய மாத்திரைகளை நிறுத்துவது அல்லது மாற்றுவது குறித்து உங்கள் டாக்டரிடம் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுங்கள்.

நிறுத்தும் வழி

குறட்டையை தற்காலிகமாக நிறுத்த பல சுலபமான வழிகள் இருக்கின்றன. குறட்டை வரும் நபர் மல்லாந்து படுத்திருந்தால் பக்கவாட்டில் அல்லது ஒருக்களித்து படுக்க வையுங்கள். குறட்டை நின்று விடும்.

இன்னொரு முறை என்னவென்றால் இரவு உடையின் பின்புறம் ஒரு டென்னிஸ் பந்தையோ அல்லது பஞ்சால் செய்யப்பட்ட பந்தையோ வைத்து தைத்துவிட்டால் அவர்கள் மல்லாந்து படுக்க முடியாது. பக்கவாட்டில்தான் படுக்க வேண்டியிருக்கும். அதனால் குறட்டை தொந்தரவும் இருக்காது. (ஆனால் இதனால் உங்கள் துணைவர் அல்லது துணைவியிடமிருந்து வரும் விளைவுகளை நீங்கள்தான் சந்திக்க வேண்டும். ஹி…ஹி…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக