இனி இவன் மனிதன் அல்ல!
அவன் இப்போது
முதுமையின் அந்திம
நேரத்தில்..,
பலமும்
முறுக்கும்
ஆணவமும் திமிரும்
அற்று
அடக்கப்பட்ட
புலன்களுக்குள்
மனமும் உணர்வும் அடங்காமல்
கிடப்பவன் அவன்
தான்..!
கனவிலும் கூட
இப்படியெல்லாம் ஒரு
நிலையை
நினைத்து பார்த்திருக்கவும்
அவனால்
முடிந்திருக்குமோ..!
புலன்களின்
பலகினங்களில்
இப்படியெல்லாம் விதவித
அவஸ்தைகளா..?
காலம் பூராவும் அவன் செய்த
புண்ணியங்களின் பலன்கள்
எங்கே..?
அவன் செய்த வாதங்களின்
அறிவுத்திறமைகளெல்லாம்
எங்கே..?
பேயாய் அலைந்து
இராப்பகலாய்
மற்றவனை ஏய்த்தும்
வீழ்த்தியும்
அவன் கண்ட
செல்வங்களெங்கே..?
சுற்றி சுற்றி வந்த
அவனின் உறவுகள்
தான்
இன்று ஏதும் உதவ
முடியுமா..
கோபம் ..
தாபம்…
விருப்பு..
வெறுப்பு..
கொள்கை..
கோட்பாடு..
புகழ்.. பெருமை..ஆடம்பரம்..
அது.. இது என்ற
எல்லா
மண்ணும் மண்ணான
வேளையிது
அவனுக்கு!
எல்லாம் இருந்தும்
எல்லாம்
அற்றவனாய்
இங்கே அவன்
தான்..!
எலும்பும் தசையும்
கொண்ட
அவனின் உடல்கூட்டிற்கு
வயதாகிவிட்டது
எழும்பிடும் உணர்வுகளுக்கு தான்
வயதாகுமா..
வேர்களான அவனின்
நரம்புகளையும்
சாறுகளான அவனின் இரத்த
ஓட்டத்தினையும்
காலம்
கெடுத்திருக்கலாம்..,
மனதிற்கு
முதிர்வொன்றும் இல்லையே..,
என்ன செய்யவான்
அவன்!
ஆரம்பம் கொண்ட
உடல்
முடிவெய்தத்தான்
வேண்டும்
ஆரும்
இவ்வோட்டத்திற்கெதிராய்
ஏதும் செய்திடல்
இயலாது
பருவங்கள் பறந்து இளமை
கண்டவன்
முதுமை கழியும் நேரம் -
அவனின்
மாற்றங்கள் காணா உயிர்
உடலோடு
உடனிருக்க
வகையழிந்தால்
என்ன சொல்ல அந்த
நேரப்போராட்டத்தை..!
அவன்..
உடல் விடை
கொடுக்காது..
உயிர் நிலைக்க
முடியாது
பலகீனம் சூழ்ந்த
கருவி
பலமாய் எப்படி
இயங்கும்
தேய்ந்து.. தேய்ந்து.. தேய்ந்து
தேககூடுபோனதால்
ஒய்ந்து அடங்கிடுமே இது நாள்
இயக்கமெல்லாம்…!
கண்கள்
திறந்திருக்க..
காதுகள்
கேட்டிருக்க..
சுவாசம்
சுழன்றிருக்க..
உணர்வும்,
சிந்தனையும்,
புலன்களை இயக்க இயலா நிலையில் இன்று
அவன்..
சக்தி இழந்த
வெறும் சக்கை…
என்ன செய்ய…
என்ன
சொல்ல..
மனித பலகீனம்.. அவனும் விதி
விளக்கல்ல!
ஏதும் இயலாது.. முடியாது..
அவனால்..!
பலகீனம்.. பலகீனம்..
பலகீனம்!
பலகீனத்தின் தாக்கம் உடலெங்கும்
விரவ
கொஞ்சம் கொஞ்சமாய் சாவு
கவ்வ
எல்லாம் செத்தப்பின் சடலம்
ஆகிவிட்டான்..!
இனி இவன் மனிதன்
அல்ல!
22 November 2011
பொய்த் தோல்..!
அன்னையின் கருவறை விடுத்து
அண்டம் விழுந்த நிகழ்வினிலிருந்தே
இரவுப்பகலாய் ஓடிடும்
பொழுதுகளின் ஓட்டத்தில் நிகழும்
ஒவ்வொரு செயல்களும் உண்டாக்கும்
மாய திரைகளில் சிக்குண்டு,
சுயம் எனக்கு மறக்கடிக்கப்பட்ட
சுத்தமில்லாத சூழல் நிலவும் தருணங்களில்
நான் 'நான்' என உச்சரிக்கும் போது
மூல இருப்பின் மூலத்திலிருந்தே ஒழிய
துல இருப்பிற்கு ஏதும் இல்லை என
முளையில் ஒளிந்து கொண்ட
ஒளி எனக்கு ஓதி ஒலித்துக் கொண்டே
இருப்பதன் இயல்பின் காரணத்தால்,
இப்பொழுதில் எல்லாம்
நான் என்பதினை குறித்த முன்வரைவு
மனக்கண்ணின் பின் திரைகளில்
ஓடிக் கொண்டே இருப்பதால்
கவனம் கொள்ள வேண்டிய கட்டாய சூழல்!
அனிச்சையாகவே என் நான்
'நான்' குறித்து சற்றே
நாட்டம் விடுத்து நிற்கிறது!
அதுவே முற்றுமானால்
முழுசுகம் தானே!
21 November 2011
நெஞ்சமெல்லாம் நீயே அம்மா!
உன் இமைகளில் என்னை
ஏந்தி
எண்ணத்தால் எப்போதும்
சூழ்ந்து
என்னை வளர்த்த
பொழுதுகளில்..
நானே நாணும்
அளவுக்கு
என்னை பிரியமுடன்
அழைத்து
ஆரத்தழுவி உச்சிமுகர்ந்த
பேரன்பே!
ஆர்த்தெழும் அருவியில்
கூட
சீரின்றி பலவாறு நீர் விழும்,
என்னை உயிரின் உயிராக பார்த்து
நீ வாழ்த்திய வாழ்த்துச்
சுனைகளிலிருந்து
அருவி நீருக்கு சீப்பிட்டு வாரியது
போல்
சீரோடு வெள்ளமென
வருமேயம்மா..
உன் திருவாய்
மொழி!
அந்த வாழ்த்துக்களின்
வியாபகங்களில்
அதன் தூய்மைகளின் ஜீவன்களில்
நிறைந்து இருக்கும் அருள்கள் தானே
இன்றும் என்னையும் சுற்றத்தையும்
நன்றே வாழ வைத்திருக்கிறது!
நாளும் பொழுதும்
என்னை
அன்னையென
வளர்த்ததும்
காட்சிக்கு
முன்
நான் அறியா குருவாய்
ஆகி
நிகரற்ற மேன்மைச்
செயல்களால்
ஆன்மீக தேடல்களின்
தூபங்கங்களை
ஆழ்மனதில் நீ விதைத்துக்கொண்டே
இருந்ததும்
தாயே நான் இன்று
உணர்கிறேன்.
கோபம் நெருங்கா கோபுரம் அம்மா
நீ!
வாழ்த்துதல் தவிர்த்த மற்ற வகைகள்
அறியாதவர் நீ!
பசித்தவருக்கு முப்போதும் ருசித்து அமுதம்
வார்த்தவர் நீ!
ஏழைக்கு எப்போதுமே இரங்கும் சீமாட்டியம்மா
நீ!
நாடிவந்த யாவரும் நாளெல்லாம்
வாழ்த்தியவரம்மா நீ!
இறையருள் மிக்கவர்
நீ!
இரசூல் அன்பு மிக்கவர்
நீ!
இஸ்லாத்தின் பண்புகள்
யாவும்
இனிதாய் வீற்றிருப்பவரன்றோ
நீ!
தலைவா நீ அருள் என் அம்மைக்கு!
நின் ஆசி கொண்டும்,
நினதருள் வேந்தர் நீங்கா
நீடுபுகழ்
நித்திய சத்திய நாதர் நபிகளார்
(ஸல்)
வான்கிருபை
கொண்டும்.
சோர்வு நீங்கி.. சுகம் பரவி..
நலம்
ஓங்கட்டும்!
நாடிகள்
சிறக்கட்டும்!!
நாட்கள்
நீளட்டும்!!!
இரத்த ஓட்டங்களெல்லாம்
இனிதாகட்டும்
இனியெல்லாம்
நலமாகட்டும்!!!
மனம் என்றும் நிறைந்திருக்க
மகிழ்ச்சியே
ஆளட்டும்.
அம்மா நீங்கள் வாழ்க!
தாயே நீங்கள்
வாழ்க!!
என் ஆருயிர் பாட்டியாரின் உடல் நலம்
சிறக்க என் அன்பின் உறவுகளே அருள்கூர்ந்து எல்லாம் வல்ல இறைவனிடம் தங்களின்
பிரார்த்தனைகளை எதிர்பார்க்கிறேன்.
19 November 2011
மீட்டுக் கொள்!
தனிமரமாய்
தயவுகள் இல்லாமல்
காட்டுக்கருவறையில்
கடுந்தவம் புரிந்தாலும்..!
வாட்டும் வெயில் பனியில்
வதைத்து உடல் வெந்தாலும்..!
ஆட்டிப் படைத்திடும்
ஆண்டவனின் ஆணையின்றி
அணுவும் அசைந்திடுமோ..!
ஞனமது பிறந்திடுமோ..!
வானம் பூமி இவைதனிலே
ஆன உண்மை அறிந்தாயோ..?
வேண்டும் உனக்கிறைவன்
என்றால் நீ – மனம்
வேண்டுவதெல்லாம் விட்டுவிடு!
-அவனை
காண்பதிலெல்லாம் தொட்டுவிடு!
ஆசையெல்லாம் ஆண்டவனே
பூசை உனக்கடா என்னிறைவா
மீசை தாடி வேசமில்லை,
தலைவர் முஹம்மதின்
நேர்வழியும்
தகைமை முஹையத்தீன் மனவலியும்
முன்னேறிய முன்னோர்கள்
முழுநிலையும்
முன்னவனே முழுமையும் தா!
கவர்ச்சியிலே கண் லயித்து
மலர்ச்சி இன்றி முகம் சோம்பி
பொருளுக்கு போட்டியிட்டு
காட்டிய வழி தவறி
மருவுணர்ந்து – மீண்டும்
கருவுக்கே நான் மீண்டேன்!
உள்ளதை உணரவேண்டும்
உள்ளாசை பிறந்ததடா..!
அல்லதை அகற்றி – நானும்
வல்லோனே உனைச் சேர
வழி வகேன்!. ஆமீன்.
(என இறைஞ்சு…)
இது என் கல்விக்கூடக் காலத்தில் எழுதிய ஆன்மீக
கவிதை.. தீப்போல் இருந்த உணர்வுகளின் வெளிப்பாட்டில் வந்த பல கவிகளில் இதுவும்
ஒன்று. காலம் 1997
18 November 2011
விலைவாசி உயர்வு.. நடுத்தர மக்கள் பீதி!!!
திரும்பப் பெறு!
திரும்பப் பெறு!! திரும்பப் பெறு!!!
தமிழக அரசின் வரலாறு காணாத அதிரடி விலைவாசி
உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்!
மாறி மாறி
குற்றச்சாட்டு கஜானா காலி!
அடகுக்கடைக்கு
போயாச்சு குடிமகளின் தாலி!
மாற்றம் வேண்டும்
மாற்றம் வேண்டும் ஓட்டுப்போடக் கேட்டு!
நமக்கு நாமே
வைத்துக் கொண்டோம் தமிழா வேட்டு!
சாகடிச்சு
சாகடிச்சு ஆடுராங்க ஆட்டம்!
நோகடிச்சு
நோகடிச்சு பாடுராங்க பாட்டும்!
நடுதர வர்க்கமெல்லாம் நடுரோட்டுக்கு
வந்தாச்சு!
படுத்துர பாட்டை எண்ணி முழிபிதுங்கி
நின்னாச்சு!
எங்க எலவெடுத்து கொடுப்பாங்களாம்
இலவசாய்!
அரசாங்கம் கொடுத்தாக வாங்கிகனுமாம்
பரவசாய்!
ஆளுக்கொரு சேனல் வச்சு அரசியல் போர்
நடத்துராங்க!
ஐய்யோ அகப்பட்டுக்கொண்டதோ நானும் நீனும்
தாங்கோ!
செத்துப்போன நாமத்தெல்லாம்
வாழவக்கிறாங்க!
எங்கள சாகடிச்சு நாமமாக்க
வழிப்பண்ணுராங்க!
மானியத்த கொடுக்கலயாம் மத்திய அரசு! -
கட்டிய
மடிக் கோவணத்தை பிடுங்குதடா மாநில
அரசு!
ஊருக்கெல்லாம் போயிவந்த பேருந்து
கட்டணம்!
இப்போ போகமட்டும் கொடுக்கனுமாம்
குப்பனும்!
திட்டங்களால் வயித்துல பால் வாக்க வேணாம்! - குறைந்த
பட்சம்
திட்டமிட்டு சனங்களுக்கு பால் ஊத்த
வேணாம்
பழைய ஆட்சி
செய்ததெல்லாம் இவங்களுக்கு விசமாம்!
பழாப்போன அரசே! பல குடும்பத்துல
குடிக்கிறானே நெசமா!
சட்டசபைய
பூட்டு..!
பாடத்திட்டம்
மாத்து..!
நூலகத்த
சாத்து..!
விலைவாசி ஏத்து!
இப்ப்பூடி.. அடிக்கிறாங்க
கூத்து..!
போராட்டத்தால் நீ எதிர்த்தாலும்
ஆள்பவர்கள் பழகிட்டாங்க பாத்து..!
அரைமணி நேரம் சிறையில் வச்சு
விட்டுடுவாங்க எல்லோரையும் சேத்து..!
கொள்கையே இல்லையின்னாலும்
கொடிபிடிப்போம்!
கொள்கை கெட்டவர்களுக்காவே நாம்
அணிவகுப்போம்!
அடுத்த தேர்தலிலும் அமர வைப்போம்!
செத்த எல்லா நாமங்களும்
வாழ்க!!!!!!!
- ஜா.முஹையத்தீன்
பாட்சா
புகழ்ந்தே பாடுவாய் நெஞ்சமே..!
பல்லவி:
காத்தமுன்
அன்பியா ஆனவரை
கலிமாவின்
கருவாய் மிளிர்பவரை
உத்தம தோழர்கள்
உயிர்த் தலைவரை
உண்மையாய்
திண்ணமாய் புகழ்ந்தே பாடுவாய்!
இணைப்பு:
நெஞ்சமே..!
முஃமின் நெஞ்சமே..!!
நெஞ்சமே..!
முஃமின் நெஞ்சமே..!!
சரணங்கள்:
தினுல் இஸ்லாம்
நெறியை
தீந்தேனாய் தந்த
நபியை – உயர்
வேதம் அளித்த
அழகை
வேந்தர்க்கு
வேந்தர் அருளை
மாந்தர்க்கு
உரைத்து மகிழ்ந்தே பாடுவாய்!
தாஹா நபியை
இரசூலை
தாயிபில் உதிரம்
உதிர்த்தவரை – பெரும்
வேதனைப்
பொருந்திய சாதனையை
பொறுமைக் கடலை
பெருமான் இரசூலை
பெருமையாக
நெகிழ்ந்தே பாடுவாய்!
ஆதி முதல்
ஜோதியின்
அற்புத மணம்
வீசுதே – இம்
மேதினி மேலே
எங்கிலும்
மென்மை தென்றல்
காற்றிலே
கண்மணி நாதரை
நுண்ணறிவாளரை
விண்ணுக்கும்
மேலே வியந்தே பாடுவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக